செய்திகள்

தமிழ்நாட்டில் 81 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவிப்பு

Published On 2017-07-26 06:17 GMT   |   Update On 2017-07-26 06:17 GMT
தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 81 லட்சத்து 77 ஆயிரத்து 472 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்கள் வேலை இல்லாமல் பணியிட உத்தரவை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பித்து பதிவு செய்து வைப்பது நடைமுறையில் உள்ளது.

கடந்த மாதம் வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் எத்தனை லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டது.

அந்த ஆய்வில் தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 81 லட்சத்து 77 ஆயிரத்து 472 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்கள் வேலை இல்லாமல் பணியிட உத்தரவை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் சுமார் 21 லட்சம் பேர் 23 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல வேலைக்காக காத்திருப்பவர்களில் 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 29 லட்சமாக உள்ளது.

வேலைக்கு பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்துள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 92 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள்.

2 லட்சத்து 86 ஆயிரம் பேர் முதுகலை படிப்பு முடித்த ஆசிரியர்கள். சட்டம் படித்தவர்களில் 216 பேரும், மருத்துவம் படித்தவர்களில் 784 பேரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News