செய்திகள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி

Published On 2017-07-24 05:41 GMT   |   Update On 2017-07-24 05:41 GMT
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியானார்கள்.

விருதுநகர்:

மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த வெள்ளிக்கிமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு தென்மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி வந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் மிக அதிகமாக காணப்பட்டது.

பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தபடி மலை ஏறினர். இதனால் சில பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை-விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் உதவி செய்தனர்.

அப்படி இருந்தும் சிவகாசியை சேர்ந்த ரவிக்குமார் (வயது40), வேலூர் கொசப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி (63) ஆகிய இருவரும் மூச்சுத்திணறலால் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் சதுகிரி மலையில் சில பக்தர்கள் மாயமாகி விட்டதாக அவர்களுடன் வந்தவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடு பட்டு வருகின்றனர்.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையில் திரண்டுள்ளதால் மேலும் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News