செய்திகள்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியருக்கு இடைக்கால ஜாமீன்

Published On 2017-07-23 08:13 GMT   |   Update On 2017-07-23 08:13 GMT
கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மதுரை ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மதுரை:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 30-ந் தேதி ஓ.என்.ஜ.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். ஆனால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேல் (97) நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் மயிலாடுதுறை தேத்தங்குடி வடக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

தந்தையின் இறுதிச் சடங்கில் பேராசியர் ஜெயராமன் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று பிற்பகலில் நீதிபதி நிஷாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேராசிரியர் ஜெயராமனுக்கு வருகிற 26-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News