செய்திகள்

ஜெல்லி மீன்களால் சுற்றுலா பயணிகள் பீதி: கொடைக்கானல் ஏரியில் ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவு

Published On 2017-07-20 12:24 GMT   |   Update On 2017-07-20 12:25 GMT
கொடைக்கானல் ஏரியில் ஜெல்லி மீன்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்:

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நன்னீரில் வசிக்கும் ஜெல்லி மீன்கள் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டறிந்த வேலூரைச் சேர்ந்த மாணவர் அதனை குவளையில் எடுத்து தனது தந்தை உதவியுடன் ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.

விலங்கியல் துறை முன்னாள் மேலாளர் வெங்கட்ராமன் இதனை சோதனையிட்டு அது ஜெல்லி மீன்தான் என உறுதி செய்தார். கடலில் ஆழமான பகுதிகளில் வசிக்கக்கூடிய ஆபத்தான ஜெல்லி மீன்கள் கொடைக்கானல் ஏரியில் இருப்பது குறித்த செய்தி வரவே சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.

ஏரியில் ஜெல்லி மீன்கள் உள்ளதா? என ஆய்வு நடத்த கலெக்டர் வினய் மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மீன் வளத்துறை துணை இயக்குனர் காசிநாதன் தலைமையில் ஏரியில் உள்ள தண்ணீரை மாதிரிக்கு எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் 2 நாட்களில் கொடைக்கானல் வந்து ஏரியை ஆய்வு செய்ய உள்ளனர். இவர்கள் ஆய்வுக்கு பிறகு கொடைக்கானல் ஏரியில் உண்மையிலேயே ஜெல்லி மீன்கள் உள்ளதா? அதன் தன்மை என்ன? என்பது குறித்து தெரிய வரும்.
Tags:    

Similar News