செய்திகள்

பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தக்காளி, சின்ன வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை

Published On 2017-07-18 09:39 GMT   |   Update On 2017-07-18 09:39 GMT
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய 3 டன் தக்காளியும், 5 டன் சின்ன வெங்காயமும் கொள்முதல் செய்யப்பட்டு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மொத்த விற்பனைக்கு கிலோ ரூ.80-ம் சில்லரையில் ரூ.100 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.120முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது.

மற்ற காய்கறிகள் அனைத்தும் விலை குறைவாக இருந்த போதிலும் இவற்றின் விலை மட்டும் குறையவில்லை. தக்காளி, சின்ன வெங்காயம் விளைச்சல் குறைவாக இருப்பதால் வரத்து குறைந்துள்ளது. விலையேற்றத்திற்கு இதுவே காரணம் என்று மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளி மார்க்கெட்டில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கம் மூலம் நடக்கும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் இவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று அங்குள்ள பண்ணை பசுமை காய்கறி கடையை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகமாக இருப்பதால் சென்னையில் உள்ள 34 பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும், 2 நடமாடும் கடைகளிலும் குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 110 கூட்டுறவு ரே‌ஷன் கடைகளிலும் விற்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தக்காளி கிலோ ரூ.66, சின்ன வெங்காயம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதற்காக 3 டன் தக்காளியும், 5 டன் சின்ன வெங்காயமும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் தேவைப்பட்டால் பண்ணை பசுமை காய்கறி கடைகள் திறக்கப்படும்.

தக்காளி கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் இருந்தும், சின்ன வெங்காயம் மகாராஷ்டிராவில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சியில் 8 பண்ணை பசுமை காய்கறி கடைகளும், ஒரு நடமாடும் கடையும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News