செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: தமிழக முதல்வரிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி

Published On 2017-07-17 18:13 GMT   |   Update On 2017-07-17 18:13 GMT
துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ.கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார்.
சென்னை:

துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ.கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார்.

துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை  நடைபெற்றது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வெங்கையா நாயுடுவை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இதனை அறிவித்தார்.



இதனையடுத்து, வெங்கையா நாயுடுவுக்கு தொலைபேசி மூலம் ஆதரவு கோரி அனைத்துக்கட்சித் தலைவர்களிடமும் பிரதமர் மோடி பேசி வருகிறார். அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்திடம் முதலாவதாக பேசி ஆதரவு கேட்டார். இதன் பின்னர், துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுவை ஆதரிக்க உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசி ஆதரவு கேட்டுள்ளார். ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க வாக்களித்துள்ள நிலையில், வெங்கையா நாயுடுவையும் ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News