செய்திகள்

குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக சாரல் மழை

Published On 2017-06-24 10:02 GMT   |   Update On 2017-06-24 10:02 GMT
குமரி மாவட்டத்தில் இன்று காலையும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. சாரல் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் திரண்டு குளித்து மகிழ்கிறார்கள்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. ஒருவாரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. அதன்பிறகு மழை ஓய்ந்து வெயில் அடிக்கத் தொடங்கியது.

கடந்த 3 வாரங்களாக மழை பெய்யாததால் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து விடுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், குழித்துறை, களியக்காவிளை, குளச்சல், கன்னியாகுமரி, குலசேகரம், பூதப்பாண்டி என மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது.

இன்று காலையும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. நாகர்கோவிலில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 17.4 மில்லி மீட்டரும், கோழிப்போர் விளையில் 14.4 மில்லி மீட்டரும் பதிவாகி இருந்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

பேச்சிப்பாறை அணை இன்று காலை 13.95 அடியாக இருந்தது. அணைக்கு 158 கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இங்கு 12 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல பெருஞ்சாணி, சிற்றார், மாம்பழத்துறையாறு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சாரல் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் திரண்டு குளித்து மகிழ்கிறார்கள்.

Tags:    

Similar News