செய்திகள்

வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கும்பல் தாக்குதல்

Published On 2017-06-22 10:04 GMT   |   Update On 2017-06-22 10:04 GMT
வியாசர்பாடியில் இன்று காலை ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து தப்பிய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:

மாதவரத்தை சேர்ந்தவர் தியாகு என்கிற தியாகராஜன். இவர் மீது கொலை வழக்குகள் உள்ளன. மாதவரத்தை சேர்ந்த முரளி என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.

இதனால் தன்னை எதிரிகள் பழிக்குப்பழி வாங்க குறி வைத்திருப்பதை அறிந்த தியாகராஜன் வியாசர்பாடியில் பதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை தியாகராஜன் தனது வாகன ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்க வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரில் உள்ள ஆட்டோ பயிற்சி நிறுவனத்துக்கு சென்றார்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் டீ வாங்க கடைக்கு சென்றுவிட்டார். அலுவலகத்தில் தியாகராஜன் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் தப்பி முயற்சி செய்தார்.

ஆனால் அக்கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி கொன்றது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அப்போது டீ வாங்கி வந்த ராஜசேகர் தனது அலுவலகத்தில் இருந்து ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வெளியேறியதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அலுவலகத்துக்குள் சென்ற போது ரத்த வெள்ளத்தில் தியாகராஜன் பிணமாக கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து துணை கமி‌ஷனர் சியாமளா தேவி, உதவி கமி‌ஷனர்கள் ஜான் ஜோசப், அன்பழகன், இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.அவரது உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வியாசர்பாடியில் தியாகராஜன் பதுங்கி இருப்பதை அறிந்த எதிரிகள் திட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து கொலை செய்துள்ளது. விசாரணையில் தெரியவந் துள்ளது.

ரவடி தியாகராஜன் வெட்டி கொலை செய்யப்பட்ட அலுவலகம் முதல் தளத்தில் உள்ளது. இதனால் கொலை நடந்த போது பொதுமக்கள் யாருக்கும் தெரியவில்லை. கொலை கும்பல் ஆயுதங்களுடன் சென்றதை பார்த்த பின்னர் தான் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்துள்ளனர்.

தப்பிய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags:    

Similar News