செய்திகள்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாரிடம் தாரை வார்ப்பதா?: ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2017-06-21 08:22 GMT   |   Update On 2017-06-21 08:22 GMT
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாரிடம் படிப்படியாக விற்க முடிவு செய்யும் முயற்சிக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூரில் காமராஜர் துறைமுகம் லாபகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 12 பெரிய முக்கியத் துறைமுகங்களில் காமராஜர் துறைமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

காரணம் இந்த துறைமுகத்தின் லாபத்தில் இருந்து குறிப்பிட்டத் தொகை மத்திய அரசுக்கு பங்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தனியாருக்கு படிப்படியாக தாரை வார்க்கும் முயற்சியை தற்போது மத்திய பா.ஜ.க. அரசு எடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்.

கடந்த வருடத்தில் மட்டும் இந்த துறைமுகத்தின் மூலம் 480 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கான பங்கீட்டுத் தொகை பங்குதாரர்களான மத்திய அரசுக்கும், சென்னை துறைமுகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

காமராஜர் துறைமுகத்துக்கு அருகே பல தனியார் துறைமுகங்கள் அமைந்தாலும் காமராஜர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் கூடிக் கொண்டே தான் இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு இத்துறைமுகத்தை தனியாருக்கு படிப்படியாக விற்க முடிவு செய்தால் இத்துறைமுகத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் கிடைக்காது. மேலும் இத்துறைமுகப் பணிகளில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு படிப்படியாக தாரை வார்க்க எடுக்கும் முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News