செய்திகள்

புதுவையில் விவசாய பல்கலைக்கழகம்: நாராயணசாமி தகவல்

Published On 2017-06-16 10:12 GMT   |   Update On 2017-06-16 10:12 GMT
புதுவையில் விவசாய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

வையாபுரி மணிகண்டன்: புதுவையில் விவசாய கல்லூரி அமைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளதா?

அமைச்சர் கமலக்கண்ணன்:- காரைக்காலில் விவசாய கல்லூரி உள்ளது. வரும்காலத்தில் புதுவையில் கல்லூரி தொடங்க நடவடிக்கப்படும்.

வையாபுரி மணிகண்டன்:- விவசாய படிப்புகளில் தற்போது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நவீன தொழில்நுட்பங்கள் விவசாயம் சார்ந்த படிப்புகளில் வந்துள்ளது. எனவே, புதுவையில் தனியாக விவசாய கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- நானும், வேளாண் அமைச்சரும் மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்தோம். காரைக்கால் விவசாய கல்லூரியை தரம் உயர்த்த வேண்டும். புதிய பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும்.

விவசாய பல்கலைக் கழகத்தை புதுவையில் ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்க வேண்டும். அந்த அனுமதியை வழங்க வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் விவசாய பல்கலைக்கழகம் அமைக்கலாம்.

சபாநாயகர் வைத்திலிங்கம்:- அதற்குள் காரைக்கால் விவசாய கல்லூரியில் இடங்களை அதிகரிக்கலாம்.

கமலக்கண்ணன்:- மத்திய பல்கலைக்கழகம் அனுமதி பெற்று இடங்கள் அதிகரிக்கப்படும்.

சிவா:- புதுவை கே.வி.கே. பண்ணையில் தேவையான இடம் உள்ளது. அரசு மனது வைத்தால் உடனே கல்லூரியை தொடங்கலாம்.

சபாநாயகர்:- காரைக்கால் கல்லூரியின் கிளையை கூட இங்கு அமைக்கலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

Similar News