செய்திகள்

திடீர் மழையால் புதுவை குளிர்ந்தது

Published On 2017-06-07 10:17 GMT   |   Update On 2017-06-07 10:17 GMT
புதுவையில் நேற்று மாலை 6 மணி முதல் வானம் கருக்க தொடங்கியது. இதனால் மழை வரும் என மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரவு 10 மணிக்குமேல் மழை பெய்ய தொடங்கியது.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த 2 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. உச்சகட்டமாக 107 டிகிரி வெயில் பதிவானது. நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதனால் மக்கள் வெளியில் நடமாடமுடியாதவாறு வெயிலின் உக்கிரம் இருந்தது.

பள்ளி விடுமுறை காலமாக இருந்தாலும் குழந்தைகள் விளையாட முடியாதபடி வெயில் தகித்தது. இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது.

சில நேரங்களில் மின் வெட்டும் சேர்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருந்தனர். மழை வராதா? என ஏக்கத்துடன் எதிர்பார்க்க தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் வானம் கருக்க தொடங்கியது. இதனால் மழை வரும் என மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரவு 10 மணிக்குமேல் மழை பெய்ய தொடங்கியது.

இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது. பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. இன்று அதிகாலை இதமான குளிருடன் கூடிய வானிலை இருந்தது. நிலத்தடி நீரும் குளிர்ந்திருந்தது.

இதற்கிடையில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என சபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையேற்று கூடுதலாக 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதுவையில் மழை பெய்யும் காலத்தில் விடுமுறை அளித்தால் மழை நின்றுவிடும்.

அதேபோல தற்போது வெயிலுக்கு விடுமுறை அளித்தவுடன் வெயில் குறைந்து மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News