செய்திகள்

வில்லியனூர் அருகே ஆடையில் தீப்பிடித்து மாணவி பலி

Published On 2017-05-31 11:49 GMT   |   Update On 2017-05-31 11:50 GMT
குப்பையில் வைத்த தீ மாணவி சுடிதாரில் பிடித்ததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

வில்லியனூர்:

வில்லியனூரை அடுத்த பங்கூரை சேர்ந்தவர் நடராஜன் லாரி டிரைவர். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 17). இவர் அரியூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

சமீபத்தில் நடந்த 11-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று 12-ம் வகுப்புக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பாட்டி மற்றும் உறவினர்களுடன் அக்கம் பக்கத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர். அதை ஒரு இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தனர்.

கிருஷ்ணவேணி, தான் பொறுக்கிய குப்பைகளை அந்த தீயில் போட்டு விட்டு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சுடிதாரில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடனே அவரை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

இது குறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News