செய்திகள்

கஞ்சா வழக்கில் ஜாமீன் பெற்ற 74 வயது முதியவர் மீண்டும் கைது

Published On 2017-05-22 10:24 GMT   |   Update On 2017-05-22 10:24 GMT
கஞ்சா வழக்கில் ஜாமீன் பெற்ற முதியவர், ரூ.21 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர், மணலி சாலையில் உள்ள எழில் நகரை சேர்ந்தவர் வேதக்கண் நாடார். (வயது 74) கடந்த மாதம் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி கஞ்சா வழக்கில் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் உள்ள பீரோவில் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக வேதக்கண் நாடார் மீது போலீசார் குற்றம் சுமத்தினர். சிறையில் அடைக்கப்பட்ட வேதக்கண் நாடார், தனக்கு ஜாமீன் வழங்க கோரி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்புக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், எழில் நகர் 250 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் குடும்பத்துக்கு அரசு இலவசமாக வழங்கியது. ஆனால் முறையான உத்தரவை பிறப்பிக்கவில்லை.

இந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்த எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவராக நான் உள்ளேன். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை அபகரிக்க உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் சமூக விரோதிகள் முயற்சித்தனர்.

இதற்கு நான் இடையூறாக இருப்பதால், எம்.எல்.ஏ.வின் தூண்டுதலின் பேரில், கஞ்சா வைத்திருந்ததாக என் மீது பொய் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஐய்யப்பன் விசாரித்த போது, ஆர்.கே.நகர் போலீசார் பதில் மனுவை தாக்கல் செய்யவே இல்லை. இதையடுத்து முதியவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அதேநேரம், முதியவர் கூறும் குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால், இதுகுறித்து நேர்மையான அதிகாரி ஒருவரை நியமித்து விசாரிக்கவேண்டும் என்று போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட்டார்.

இதன்பின்னர், ஜாமீன் கேட்டு வேதக்கண் நாடார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.ரமேஷ், அவருக்கு நிபந்தனை ஜாமீனை கடந்த வாரம் வழங்கினார்.

இதையடுத்து வேதக்கண் நாடார் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் புதிதாக மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அதில், சிலரிடம் ரூ.21 லட்சத்தை இவர் மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கை பதிவு செய்த கையோடு, இந்த புதிய வழக்கில் வேதக்கண் நாடாரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கஞ்சா வழக்கில் ஜாமீன் பெற்ற அவரால் வெளியில் வர முடியவில்லை. தற்போது, இந்த புதிய மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டு, சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் வேதக்கண் நாடார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.


Tags:    

Similar News