செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை உடனடியாக மீட்க வேண்டும்: நடராசன்

Published On 2017-05-19 05:12 GMT   |   Update On 2017-05-19 05:12 GMT
இரு அணிகள் ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்று ம.நடராசன் கூறினார்.
தஞ்சாவூர்:

இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சை விளார்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டபோது டெல்லிக்கு சென்று பெற்று வந்தவன் நான். இரட்டைஇலை சின்னம் எனக்கு தான் சொந்தம் என்று உரிமை கொண்டாட எந்த தலைவருக்கும் அதிகாரம் கிடையாது. தொண்டனுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு. இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பவர்கள் துரோகிகள் என்ற மனநிலையில் தான் தொண்டர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து இருப்பவர்கள் இதுவரை செய்த தவறுகளை மறந்து, ஒன்றாக இணைய வேண்டும்.


அவர்கள் இணைந்து இரட்டைஇலை சின்னத்தை மீட்டு எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் செயல்பட வேண்டும். அப்படி ஒன்று சேர்ந்தால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. ஜெயலலிதா அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்க தகுதியற்றவர் என்று வழக்கு தொடர்ந்த பி.எச்.பாண்டியன் தான் தற்போது அ.தி.மு.க. பிளவு ஏற்பட காரணமாக இருப்பவர். இந்த சதியில் தொண்டர்கள் யாரும் சிக்கி கொள்ளவில்லை தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவிடாமல் ஜெயலலிதா சாதனை படைத்தார். அந்த சாதனையை மீண்டும் படைக்க முடியும். அதனால் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை சரி செய்யும் மோடி அரசு, ஈழப்பிரச்சனையில் காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இலங்கையில் தமிழ்ஈழ நாடு, சிங்களநாடு என இரு நாடுகள் இருந்ததாக அவர்களுடைய மகாவம்சநூல் தெரிவிக்கிறது. இந்த வரலாற்றை இந்திராகாந்தி நன்கு புரிந்து வைத்து இருந்தார். இலங்கை வரலாற்றை மோடி புரிந்து கொண்டால் தமிழ்பூமி நிச்சயம் மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News