செய்திகள்

திருப்பூரில் தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி பெண் பலி

Published On 2017-05-17 12:05 GMT   |   Update On 2017-05-17 12:06 GMT
திருப்பூரில் தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர்- மங்கலம் ரோட்டில் சென்றார்.

அப்போது 2 பெண்கள் அவரை மறித்து தங்களை ரெயில் நிலையம் முன் இறக்கி விடுமாறு உதவி கேட்டனர். இதை தொடர்ந்து பச்சையப்பன், மோட்டார் சைக்கிளில் 2 பெண்களையும் ஏற்றிக் கொண்டு சென்றார்.

அப்போது தாராபுரத்தில் இருந்து திருப்பூர் புதிய பஸ் நிலையம் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

பச்சையப்பன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, முன்னால் சென்ற ஒரு ஆட்டோ திடீரென நின்றது. இதனால் பச்சையப்பன் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் மோட்டார் சைக்கிளில் சரிந்து பச்சையப்பன், மற்றும் அவருடன் வந்த 2 பெண்களும் கீழே விழுந்தனர்.

அந்த சமயத்தில் பின்னால் வந்த அரசு பஸ்சின் சக்கரம், 2 பெண்களின் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார்.

படுகாயம் அடைந்த மற்றொரு பெண்ணையும், பச்சையப்பனையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து நடந்ததும் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சரண் அடைந்த டிரைவர் தாராபுரத்தை சேர்ந்த கதிரவன் (33) என தெரிய வந்தது.

மேலும் அரசு பஸ் டிரைவர்களின் ஸ்டிரைக்கால் கதிரவன், தற்காலிக டிரைவராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் அவர் ஓட்டிய பஸ் மோதி பெண் பலியானது தெரிய வந்தது

இதில் அரசு பஸ் மோதி பலியான பெண் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி வைஜெயந்தி (வயது 20) என தெரிய வந்தது. படுகாயம் அடைந்த மற்றொரு பெண் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த ஜெயா என்கிற நாகலட்சுமி (24) என தெரிய வந்தது.
Tags:    

Similar News