செய்திகள்

கொடைக்கானல் மலை கிராமங்களில் வெளுத்து வாங்கிய மழை

Published On 2017-05-11 11:05 GMT   |   Update On 2017-05-11 11:05 GMT
கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னவனூர்:

பருவமழை பொய்த்து போனதால் மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மறறும் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நீடித்தது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகின.

இதனால் நஷ்டம் அடைந்தனர் கொடைக்கானல் நகர் பகுதியிலும் வறட்சி காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே அனைவரும் மழையை எதிர்பார்த்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் கொடைக்கானல் நகர் பகுதியில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. சிறிது இடைவெளிவிட்டு மாலையில் தொடங்கிய மழை இரவு 12 மணிவரை நீடித்தது.

இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், பூம்பாறை, கிளாவரை, பூண்டி, கும்பூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். உருளை கிழங்கு, பூண்டு, கேரட், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

இந்த மழை தொடர்ந்தால் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Tags:    

Similar News