செய்திகள்

ரூ.7 லட்சம் லஞ்சப்பணம்: மத்திய வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை

Published On 2017-04-26 03:05 GMT   |   Update On 2017-04-26 03:05 GMT
மத்திய வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் ரூ.7 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருவதுடன், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி சோதனையும் மேற்கொண்டு உள்ளது.
சென்னை:

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை, தூத்துக்குடியில் மண்டல பயிர் பாதுகாப்பு தர நிறுவனம் மற்றும் பயிர் பாதுகாப்பு தர சேமிப்பு நிறுவனம் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செடிகளுக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் செடிகளுக்கும் தரச்சான்றிதழ்கள் வழங்கும் பணியை இந்நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதில் இணை இயக்குநர்களாக பணியாற்றும் டாக்டர் மாணிக்கம், சத்தியநாராயணா, உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றும் மகாராஜன், ராம்பிரதாப், ராஜ்குமார் ஆகியோர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன.

இதைத்தொடர்ந்து அந்த அதிகாரிகள் மீது சி.பி.ஐ. ரகசிய விசாரணை நடத்தி வந்தது. இதில் உரிய ஆதாரங்கள் கிடைத்ததால் அதிகாரிகள் 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து அதிகாரிகள் மாணிக்கம், சத்தியநாராயணா ஆகியோர் சென்னைக்கு விமானத்தில் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்கள் இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது இருவரிடமிருந்தும் ரூ.7.10 லட்சத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது லஞ்சப்பணம் என தெரியவந்தது. இதன் அடிப்படையில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகள் மாணிக்கம், சத்தியநாராயணா ஆகியோரிடம் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணை முடிவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.


Similar News