செய்திகள்

மத்தூர் அருகே கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி

Published On 2016-12-25 11:34 GMT   |   Update On 2016-12-25 11:34 GMT
மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கல் மீது மோதியதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பதூர் தாலுகா கந்திலி பகுதியை அடுத்த தொக்கியம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சீனிவாசன்(28) லாரி டிரைவர். திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் வேலை முடிந்து நேற்று மாலையில் சீனிவாசன் வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது காய், கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி வருமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறினர்.

இதையடுத்து சீனிவாசன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு காய்கறி மற்றும் மளிகை பொருள் வாங்குவதற்காக இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கடை வீதிக்கு சென்றார்.

அங்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு, அதனை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு சீனிவாசன் வீட்டிற்கு திரும்பினார். இரவு 12 மணி அளவில் மத்தூர் அருகே உள்ள சந்தூர் பக்கம் தாதனூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அந்த பகுதி இருட்டாக இருந்ததால் சீனிவாசன் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த கல் மீது மோதினார்.

இதில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக சீனிவாசனுக்கு பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர் விபத்தில் இறந்து விட்டது பெற்றோரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த விபத்து சம்பவம் குறித்து மத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News