செய்திகள்
பிரதமர் மோடி

2-ந்தேதி தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார்

Published On 2021-03-31 08:39 GMT   |   Update On 2021-03-31 08:39 GMT
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
மதுரை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று தாராபுரத்தில் அவர் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

நாளை மறுநாள் (2-ந்தேதி) காலை 10.30 மணிக்கு மதுரையில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

மதுரை ரிங் ரோடு அம்மா திடலில் இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.


இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜனதா தலைவர்கள், வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

அதன் பிறகு அவர் நாகர்கோவில் செல்கிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2-ந்தேதி காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வருவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது நாளை (1-ந்தேதி) இரவே பிரதமர் மோடி மதுரை வர உள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு தகவல் வந்துள்ளது.

நாளை இரவு மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் பிரதமர் மோடி தங்குகிறார். மறுநாள் (2-ந்தேதி) தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி மதுரை வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News