செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்

Published On 2021-03-31 03:09 GMT   |   Update On 2021-03-31 03:09 GMT
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
சென்னை:

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் பிற கட்சியினர் மீது ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை கூறி விமர்சனம் செய்யக்கூடாது என தேர்தல் நன்னடத்தை விதி யில் உள்ளது. கடந்த சில நாட்களாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவது போன்று பலரின் செல்போன்களுக்கு அழைப்பு வருகிறது.

அதில் எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்பது போன்ற பதிவு உள்ளது. அந்தப் பேச்சு, தி.மு.க. வுக்கு எதிரான ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது. மேலும் தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அதை நிறுத்த வேண்டும். இந்த விதிமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று கடந்த 28-ந் தேதி சென்னை தியாகராயநகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்துள்ளார். இதுதொடர்பான தேர்தல் விதியை மீறி அவர் செயல்பட்டுள்ளார். அதே கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, தான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று மறைமுகமாக இந்து கடவுளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சாதி, மதம், இனம் போன்றவற்றை குறிப்பிட்டு வாக்கு கேட்கக் கூடாது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி சட்டத்தை மீறி உள்ளார். எனவே, இதுதொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Tags:    

Similar News