செய்திகள்
கனிமொழி

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு

Published On 2021-03-28 11:03 GMT   |   Update On 2021-03-28 11:03 GMT
கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த ஆர்.காமராஜ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானா அருகில் வேனில் பிரசாரம் செய்தார்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மொழி, சமூகநீதிக்கு எதிரான ஆட்சி. விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனியில் மத்திய அரசு அடகு வைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளுகின்ற ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து பா.ஜனதாவின் பினாமி ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை தேர்தலின்போது முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள், கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாயிகளின் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டி நிலுவை தொகை பெற்று தரப்படும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விவசாயத்திற்கு தனிபட்ஜெட் போடப்படும். திருவாரூரில் இசை கல்லூரி தொடங்கப்படும்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான பொற்கால ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட வேண்டும். நமது மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான பூண்டி கே.கலைவாணனை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நாகை எம்.பி. செல்வராசு, ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், நகரசபை துணை தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி (தனி) சட்டசபை தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் மாரிமுத்துவை ஆதரித்து திருத்துறைப்பூண்டியில் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமனை ஆதரித்து தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரளம் பூந்தோட்டம் பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசும்போது கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த ஆர்.காமராஜ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தன்னுடைய சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும், ஆட்சியையும் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். மணல் கொள்ளைக்கு பெயர் பெற்ற பகுதியாக இப்பகுதி விளங்கியுள்ளது. இதற்காகவே இரண்டு பாலங்களை கட்டியுள்ளனர். மேலும் உணவு பொருட்களை வினியோகம் செய்வதில் முறைகேடுகள் செய்துள்ளார்.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மக்களோடு மக்களாக வாழக்கூடிய வேட்பாளர் சாமானிய மக்களின் உணர்வுகளை புரிந்தவர். வேட்பாளர் வாக்குச் சாவடிக்கு செல்லும் முன்பு அ.தி.மு.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. அமைச்சரும் அடித்த மணல் கொள்ளையை மனதில் நிறுத்தி ஒரு நல்லாட்சி அமைந்திட அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News