செய்திகள்
சீமான்

ஆட்சி முறையை மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- சீமான் பேச்சு

Published On 2021-03-20 08:13 GMT   |   Update On 2021-03-20 08:13 GMT
தேர்தல் நேரத்தில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம். இலவசங்கள் அவமானகரமானது என்று சீமான் கூறினார்.
நெல்லை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, பேட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அவர் மேலப்பாளையத்தில் பேசியதாவது:-

தமிழகத்தில் புதிய ஆட்சியை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஒரு தந்தை மகனுக்கு நல்ல கல்வி, ஒழுக்கத்தை கற்று கொடுப்பார். அதுபோல அரசியலில் வளர்ந்து வரும் உங்கள் குழந்தையான எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

நாட்டில் ஊழல், லஞ்சம் அதிகரித்து விட்டது. பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் புரையோடி கிடக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்களை நம்பி தேர்தல் களம் காண்கிறோம்.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளான வீட்டு உபயோக பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளி உள்ளார்கள். பின்னர் அதனை அவர்களே இலவசமாக கொடுத்து யாசகம் பெறுபவர்களாக்கி விட்டனர்.

இலவசத்திற்காக அரசு ஒதுக்கும் பணம் மக்களிடம் இருந்தே எடுக்கப்படுகிறது. இந்த பணம் அவர்களிடமே இருந்தால் அவர்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

தேர்தல் நேரத்தில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம். இலவசங்கள் அவமானகரமானது. இந்த ஆட்சி முறையை மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு உதவிகள் செய்ததாக மத்திய மந்திரி கூறி உள்ளார். அப்படியானால் 130 கோடி மக்களில் 80 கோடி பேர் ஏழ்மையில் இருப்பது ஆட்சியாளர்களுக்கு அவமானம்.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இஸ்லாமியர்கள் போட்டியிட சரியான வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் நாங்கள் 14 பேருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளோம். அதில் 9 பேர் பெண்கள். இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தலாக கருதி எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News