செய்திகள்

சென்னையில் தி.மு.க. போராட்டம்: கனிமொழி-திருமாவளவன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது

Published On 2018-05-25 06:50 GMT   |   Update On 2018-05-25 06:50 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். #SterliteProtest #DMKBandh
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும், டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய கோரியும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றிருந்தார். அங்கு திருமணத்தை நடத்தி வைத்த பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் புதுமண தம்பதியும், கட்சி தொண்டர்களும் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூரில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கனிமொழி- திருமாவளவன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கண்டன முழக்கமிட்டனர்.

இதில் அண்ணாநகர் மோகன், கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, அகஸ்டின்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சைதாப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்- மறியல் நடைபெற்றது.

இதில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சைதை குணசேகரன், மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

குன்றத்தூரில் மாவட்டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பட்டூர் ஜபருல்லா, சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் மறியல் பேராட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தீனதயாளன், ம.தி.மு.க. சார்பில் ரஜினி மற்றும் ஜோசப் அண்ணா துரை, ரமேஷ் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதே போல் நகரின் பல பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். #SterliteProtest #DMKBandh
Tags:    

Similar News