செய்திகள்

காவிரி விவகாரம் - மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர்

Published On 2018-03-02 08:49 GMT   |   Update On 2018-03-02 08:53 GMT
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #Cauveryverdict #TN
சென்னை:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்தது. கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.



இதையடுத்து தமிழகத்தில் கடந்த மாதம் 22ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தப்பட்டது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த பிரதமரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல் மந்திரி சித்தராமையா கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்வை எட்டுவதில் தாமதம் ஏற்படும்.

இந்நிலையில், திமுக செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, காவிரி விவகாரத்தில் அரசு எடுக்க உள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன், தலைமைச் செயலகத்தில் நாளை ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  #Cauveryverdict #TN #tamilnews
Tags:    

Similar News