லைஃப்ஸ்டைல்

நரைமுடி வருவதற்கான காரணமும் - உணவு முறையும்

Published On 2017-12-19 04:41 GMT   |   Update On 2017-12-19 04:41 GMT
முதுமையின் காரணமாகப் பொதுவாக, 40 வயதிற்கு மேல் நரை முடி தோன்றும். ஆனால், இன்றையச் சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் எட்டிப் பார்க்கின்றன.
கேசத்தின் வலிமை, அதன் உள் அடுக்குச் செல்களைப் பொறுத்துதான் அமைகிறது. மெல்லிய உள் அடுக்குச் செல்களைக்கொண்டவர்களுக்கு நீண்ட நேரான கூந்தலும், அடர்ந்த உள் அடுக்கு செல்களைக்கொண்டவர்களுக்கு கூந்தல் சுருண்டும் இருக்கும். இந்த இரு தரப்பினருக்குமே 40 வயதைத் தாண்டியதும் ஏற்படும் முக்கியமானப் பிரச்சனை நரை முடி. 

நரை முடி ஏன்?

‘மெலனின்’ (Melanin) எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின் (Eumelanin), பயோ மெலனின் (Bio-melanin) ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன. இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.

முதுமையின் காரணமாகப் பொதுவாக, 40 முதல் 50 வயதுகளில் நரை முடி தோன்றும். ஆனால், இன்றையச் சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் எட்டிப் பார்க்கின்றன.

மரபியல் காரணங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், துரித உணவு உண்பது, புரதச்சத்துக் குறைபாடு  மற்றும் `பயோட்டின்’ (Biotin) எனும் ஊட்டச்சத்து குறைதல், வேதிப்பொருட்களை அதிகமாகக்கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துதல் போன்றவை இளம் வயதிலேயே நரை முடியை ஏற்படுத்திவிடுகின்றன. 

நரை முடியைத் தடுப்பதற்கான உணவுகள்... 

* பாலில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் (Biotin), வைட்டமின் டி நிறைந்திருக்கின்றன. எனவே, தினமும் இருவேளை பாலை தவறாமல் குடிக்கலாம்.

* ஒரு நாளைக்கு இரு முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் பயோட்டின் (Biotin) மற்றும் இரும்புச்சத்து போன்ற கேச வளர்ச்சியைத் தூண்டும் சத்துக்களை எளிதில் பெறலாம்.

* வஞ்சரம் மீனில் உள்ள ஒமேகா-3 (Omega-3 Fatty Acid) முடியின் கருமை நிறத்தைப் பராமரிக்க உதவும்.

* உயிர்ச் சத்துக்கள் நிரம்பிய பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற கீரை வகைகளும் கேச பராமரிப்புக்குச் சிறந்தவை.
Tags:    

Similar News