லைஃப்ஸ்டைல்

இட்லிக்கு சூப்பரான ஆட்டுக்கால் குழம்பு

Published On 2017-08-16 09:44 GMT   |   Update On 2017-08-16 09:44 GMT
தோசை, இடியாப்பம், இட்லி, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஆட்டுக்கால் பாயாவை போன்று குழம்பும் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கால் - 2
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 5
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காய் அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

முதலில் ஆட்டுக்காலை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி தனியே வைக்கவும்.

குக்கரில் ஆட்டுக்காலுடன் தேவையான அளவு உப்பு, 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பத்து விசில் வந்ததும் இறக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்ததும் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து 10 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான ஆட்டுக்கால் குழம்பு தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News