குழந்தை பராமரிப்பு

வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது எப்படி?

Published On 2024-05-05 10:56 GMT   |   Update On 2024-05-05 10:56 GMT
  • புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள்.
  • படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள்.

குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.

படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது புத்தகங்களே.


புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம்சிந்தனையைத் தூண்டவும், சிந்தனையைப் புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள். நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.

முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.

Tags:    

Similar News