குழந்தை பராமரிப்பு
null

குழந்தைகளிடத்தில் அதிக கோபத்துடன் நடந்துகொள்ளாதீர்! உணர்ச்சி ரீதியாக குழந்தைகளை பாதிக்கும்!

Published On 2025-11-01 18:00 IST   |   Update On 2025-11-01 18:01:00 IST
  • பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர்.
  • பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும்.

கடல்பாசிகளை போல, குழந்தைகள் தங்கள் குடும்பத்தில், தங்களை சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே உள்வாங்க தொடங்குகின்றனர். குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறிந்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் தாய், தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் முன்மாதிரியாக இருக்கின்றனர். அதனால் குழந்தையின் சிறுவயதின்போது பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் உற்றுநோக்குவர். இந்த ஆரம்பகால அவதானிப்புகள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களின் நடத்தைகள்தான் குழந்தைகளின் ஆளுமை, மதிப்புகள், உறவுகளை கட்டமைக்கும். பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும். அதனால் குழந்தைகள் முன்பு பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும். பெற்றோர்களிடம் குழந்தைகள் உள்வாங்கும், சில விஷயங்கள் குறித்து பார்ப்போம். 

பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள்?

பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர். தங்கள் தாய், தந்தை ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் எப்படி அழைக்கிறீர்கள், ஒரு பிரச்சனையை இணைந்து எப்படி கையாளுகிறீர்கள், இருவருக்கிடையே பாசம், அன்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நன்கு கவனிப்பார்கள். இது குழந்தையின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் முன்பு சண்டை போடாதீர்கள். பெற்றோரின் சண்டைகள் குறித்து அவர்களிடத்தில் கூறாவிட்டாலும், தாத்தா, பாட்டி அல்லது அவர்கள் பேசுபவர்களிடத்தில், இன்னைக்கு எங்க அம்மாவும், அப்பாவும் சண்ட போட்டாங்க தெரியுமா? இன்னைக்கு எங்க வீட்ல பெரிய சண்ட? என தங்களை சுற்றி இருப்பவர்களிடம் வெளிப்படுத்துவர். அவர்கள் வந்து உங்களிடத்தில் கேட்கும்போதுதான் நீங்கள் குழந்தை முன்பு சண்டை போட்டதை உணர்வீர்கள். அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். 

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சுய பராமரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். அதாவது உங்களுடைய பழக்கவழக்கங்கள், சுயமரியாதை, தனிப்பட்ட உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்? ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாளுகிறீர்கள்? உங்களுடைய நேர்மை போன்றவற்றையும் உற்றுநோக்குவார்கள். 


குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடுவதை தவிர்க்கவேண்டும்

மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள்?

பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தெரியாதவர்களிடம் எப்படி பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனிப்பர். அதிலிருந்துதான் அவர்களும் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களை எப்படி நடத்தவேண்டும் என்ற மரியாதையை தெரிந்துகொள்கின்றனர்.

நிதி

பெற்றோர் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள், நிதிப் பொறுப்பு, குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்பு போன்றவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். பெற்றோரின் சேமிப்பு திறன் மற்றும் செலவு செய்யும் பண்புகள் அப்படியே அவர்களது குழந்தைக்கு வரலாம்.  

விலங்குகளை எப்படி நடத்துகிறார்கள்?

தங்கள் பெற்றோர் விலங்குகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இதன்மூலம் இரக்கம், பொறுப்பு மற்றும் அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்துதல் போன்ற குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த அவதானிப்புகள் ஒரு குழந்தையின் பச்சாதாபம், கருணை மற்றும் நெறிமுறை மதிப்புகளை வளர்க்கும்.

குழந்தைகளை எப்படி நடத்துகிறீர்கள்?

தங்களிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதுதான் குழந்தைகளை அதிகம் சிந்திக்க வைக்கும். வேறு ஏதேனும் பிரச்சனைகளால் இருக்கும் மன அழுத்தம் அல்லது மற்றவர்களிடம் இருக்கும் கோபத்தை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். இதனால் நீங்கள் வெறுப்பை உமிழ்வதாக அவர்களுக்கு எண்ணத் தோன்றும். நம் மீது பாசம் இல்லையோ என எண்ணுவார்கள். அதனால் முடிந்த அளவு தனிப்பட்ட பிரச்சனைகளை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். அதுபோல குழந்தைகளிடத்தில் அதிகம் கோபமாக நடந்துகொள்ளாதீர்கள். இது உணர்ச்சிரீதியாக குழந்தையை அதிகம் பாதிக்கும். எப்போதும் குழந்தையோடு இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும். 

Tags:    

Similar News