குழந்தை பராமரிப்பு
null

குழந்தைகள் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திடாத 5 சுவாரசிய தகவல்கள்!

Published On 2025-10-26 18:00 IST   |   Update On 2025-10-27 10:23:00 IST
  • குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
  • பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம். 

குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...

உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள். 

300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்

பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன. 

10,000 சுவை மொட்டுகள்

புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.


குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்

வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்

பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்

பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.

Tags:    

Similar News