குழந்தை பராமரிப்பு
null

குழந்தைகளின் திறனை, அறிவாற்றலை வளர்க்க உதவும் 5 குறிப்புகள்!

Published On 2025-11-08 18:00 IST   |   Update On 2025-11-08 18:00:00 IST
  • குழந்தைகளின் அறிவை வளர்ப்பது கல்வி மட்டுமல்ல!
  • உணர்ச்சிகளை அடையாளம்கண்டு பேசக் கற்றுக்கொள்வது மூளை வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம்.

குழந்தைகளின் அறிவை வளர்ப்பது, மேம்படுத்துவது என்பது வெறும் கல்வியை சார்ந்தது என்றே பெற்றோர் பலர் நினைக்கின்றனர். நிறைய பணம் கட்டி பெரியப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். அதுபோதும் அவர்களின் வாழ்க்கைக்கு என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தும் சிலர் படிப்பில் பின்தங்கிதான் இருப்பார்கள். அதற்கு காரணம் பிள்ளைகள் சரியாக படிக்காததுதான் என பெற்றோர்கள் நினைப்பர். ஆனால் இதில் பெற்றோருக்கும் பெரியபங்கு உண்டு. காரணம் படிப்பு, அறிவை கொடுப்பது வெறும் கல்வி மட்டுமல்ல. படைப்பாற்றல், பார்வை, புரிதல், கவனம் போன்றவையும்தான். இவை அனைத்தையும் பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு கட்டாயம் தரவேண்டும். பயிற்சியளிக்க வேண்டும். அவர்களின் இந்த திறன்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் ஞானத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். எப்படி? பார்ப்போம்.  

கதை சொல்லல் மூலம் கற்பனையை தூண்டுதல்

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் குழந்தைகளை கதை சொல்லி தூங்கவைப்பார்கள். இந்த கதை சொல்வது குழந்தைகள் தூங்குவதற்காக மட்டுமல்ல. குழந்தையின் கற்பனை மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதற்காக. நாம் சொல்லும் பெரும்பாலான கதைகள் கற்பனையே. அது நமக்கு தெரியும். அவர்களுக்கு தெரியாது. அவர்கள் ஆர்வமாக கதை கேட்பார்கள். நாம் கதாபாத்திரத்தையும், கதைக்களத்தையும் கூறிவிட்டு, அடுத்து என்ன நடக்கும்? என அவர்களிடம் கேட்கும்போது அவர்கள் யோசிக்க தொடங்குகிறார்கள். அவர்களும் அந்த கற்பனைக்குள் வருகிறார்கள். யோசிக்க தொடங்கும்போது கற்பனை திறன் வளர்கிறது. நம்மிடம் கதை சொல்வார்கள். பேச்சுத்திறன் வளரும்.

இந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், என்ன செய்வீர்கள்? என கேட்கும்போது சூழ்நிலையை புரியத் தொடங்குகிறார்கள். அதனால்தான் அந்தக்காலத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள். ஆனால் இப்போது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது, தூங்க வைக்க வேண்டும் என்றால், பொம்மை பாடல்களை போட்டுவிடுவது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கவேண்டும். 

விளையாட்டு

மொபைல் ஃபோன்களில் கேம் வைத்து கொடுக்காமல், காற்றோட்டமாக விளையாட விடவேண்டும். இது உடல்நலனுக்கும், மனநலனுக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். அதுமட்டுமின்றி மொபைல்களில் இருக்கும் விளையாட்டுகள், அதன்விதிகள் சொல்வதுபடியே செய்யவேண்டியதாக இருக்கும். மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது, புதிய விளையாட்டுகளை கண்டுபிடித்தல், விளையாட்டில் எழும் பிரச்சனைகளை தீர்த்தல் என திறன்களை வளர்த்துக்கொள்வர்.


குழந்தைகளை காற்றோட்டமான, உடலுக்கு வேலை கொடுக்குமாறு விளையாட செய்யுங்கள்

நினைவாற்றல், கவனம்

நம் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதும், சோர்வடைய வைப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. மூளைக்கு சிறந்த பயிற்சி சிந்திப்பதுதான். ஆதலால் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேற்கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அறிவார்ந்த பேச்சுகளில் ஈடுபடலாம். குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு, பாட்டுக்குப் பாட்டு, புதிதாக ஏதாவது ஒரு மொழியை அல்லது கலையை கற்றுக்கொள்வது போன்றவை மறதியை குறைத்து மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்கள். இது பெரிய பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு. சிறுவயதினருக்கு களிமண், ஆணிமணிச்சட்டம், மணிகளை வரிசைப்படுத்துதல், ஓவியம் வரைதல் போன்ற வேலைகளை கொடுக்கவேண்டும். இந்த செயல்கள் கவனத்தையும், நினைவாற்றலையும் மேம்படுத்த உதவும்.   

உணர்வுகளை சொல்லல்

உணர்ச்சிகளை அடையாளம் கண்டு பேசக் கற்றுக்கொள்வது மூளை வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். பெற்றோர்கள் உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் குழந்தைகளிடம் வெளிப்படுத்துங்கள். உணர்வுகளை மெல்லமாக புரிந்துகொள்வார்கள். குழந்தைகளுக்கு ஒருவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வைப்பது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கும். மேலும் அவர்களின் மனநிலையை ஒழுங்குபடுத்தவும், பச்சாதாபத்தை வளர்க்கவும் உதவும். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும்போது, சவால்களை எளிதில் கையாள்வார்கள். 

அமைதியும், சுய கட்டுப்பாடும்

கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் குறித்து அவர்களிடம் பேசும்போது அமைதி மற்றும் கட்டுப்பாடு குறித்தும் பேசவேண்டும். எந்தெந்த இடங்களில் அமைதியாக இருக்கவேண்டும், எப்படி கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களின் கவனத்தை மேம்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும், உணர்ச்சி ஒழுங்குமுறையை அதிகரிக்கவும் செய்யும். 

Tags:    

Similar News