null
குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச கட்டாயப்படுத்தாதீர்கள்!
- ஆங்கிலம் பேச அழுத்தம் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு அதிக பதட்ட உணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
- ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.
அண்மையில் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான வாக்குவாதங்கள் அரங்கேறியதை நாம் அனைவரும் அறிவோம். இதில் பலரும் ஹிந்தி திணிக்கப்படும் என்பதற்காக மும்மொழிக் கொள்கையை எதிர்த்தாலும், சிலர் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலமே முழுமையாக தெரியாதபோது எப்படி மூன்றாவது மொழி என்பதற்காக எதிர்த்தனர். ஆம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இரண்டு மொழிகளிலும் வல்லவராக இருப்போம். ஒருசிலரே. அனைவருக்கும் அவரவது தாய்மொழி என்பது மிகமுக்கியமான ஒன்று. அடுத்து இணைப்புப் பாலமான ஆங்கிலம். ஆனால் இப்போதெல்லாம் தாய்மொழி தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என பலரும் நினைக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆங்கிலவழி கல்விமுறை உள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர். பொது இடங்களில் தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என அவர்களை ஊக்குவிக்கின்றனர். ஆனால் குழந்தைகளை ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்துவது அவர்களின் மொழி வளர்ச்சி, உணர்ச்சி, ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கற்றலில் அதிகரிக்கும் பதற்றம்...
2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எகிப்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆங்கிலம் பேச அழுத்தம் இருப்பதாகவும், இது குழந்தைகளுக்கு அதிக பதட்டத்தை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச வராதபோது அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதித்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது எகிப்தில் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் அப்படித்தான். நமது மொழி தமிழ். மற்ற மொழியை தவறுதலாக உச்சரித்தால் எந்த தவறும் கிடையாது. இதனை பெற்றோர்கள் மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசுவீர்கள். வெறும் கற்பதை வைத்துமட்டும் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கக்கூடாது. முதலில் அந்த மொழியை குழந்தை அறிந்து, தெளிந்து பின்னர் பேசத்தொடங்கும்போதுதான் சரியான உச்சரிப்பு வரும். அதற்குள் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என நிர்பந்திக்கும்போது அல்லது அழுத்தம் கொடுக்கப்படும்போது, அவர்கள் பயப்படுகிறார்கள். அதிகம் பதட்டம் கொள்கிறார்கள். பதட்டத்தால் அதுசரியாக வராதபோது, அப்போது எப்போதும் நமக்கு ஆங்கிலம் வராதோ என அச்ச உணர்வு கொள்கிறார்கள். இதுவே அவர்கள் ஆங்கிலம் கற்க தடையாக அமைந்துவிடும். மேலும் படிப்பிலும் அவர்களை பாதிக்கும். அதனால் பெற்றோர் குழந்தைகளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள்.
நாம் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தும்போது அதன்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாகும்
பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசுங்கள்...
வீட்டில் நாம் நம் தாய்மொழியில் பேசுவதால் அவர்களுக்கு தமிழ் சரளமாக வரலாம். அப்படி ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அப்போது அது குழந்தைக்கு எளிதாக இருக்கும். இருமொழிகளையும் மாறி மாறி பேசும்போது இரண்டிலும் நல்ல புலமை பெறுவார்கள். அவர்களுக்கு இருமொழிகளையும் பற்றி அறிய ஆர்வம் வரும். மறுபக்கம் ஆங்கிலத்திற்கு ஆதரவாக தாய்மொழியை அடக்குவது மொத்த அறிவாற்றல் வளர்ச்சியை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை டியூஷனுக்கு அனுப்பாமல் சிறுவர்களுக்கான ஆங்கில படங்களை போட்டுக்காட்டி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை கற்றுக்கொடுக்கலாம். இயல்பான உரையாடல் மூலம் ஆங்கிலத்தை ஊக்குவிக்கலாம். மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்போது அதை கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். அதைவிடுத்து அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மேலும் தாய்மொழி அறிதலும் மிக முக்கியமானது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.