குழந்தை பராமரிப்பு
null

குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டக்கூடாது! தோலில் உள்ள இயற்கை எண்ணெய் பசை போய்விடும்.

Published On 2025-10-27 15:00 IST   |   Update On 2025-10-27 15:00:00 IST
  • குழந்தையின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யும் செயலே, தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது.
  • க்ரீம்கள், வாசனை திரவியங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!

குழந்தைகளின் சருமம் பெரியவர்களைவிட மென்மையானதாகவும், மிருதுவானதாகவும், மிகவும் உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். மாசு, வானிலை மாற்றங்கள், குழந்தையின் சருமத்திற்கு நல்லது என நினைத்து நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் (பாடி லோஷன்கள், க்ரீம்கள்) அவர்களின் சருமத்தை பாதிப்படைய செய்கிறது. குழந்தையின் நலனை எண்ணித்தான் பெற்றோர்கள் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. குழந்தையின் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல்

சிலர் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்று. பெரியவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பொருட்கள் கடுமையான ரசாயனங்கள், ஆல்கஹால், சல்பேட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். குழந்தைகளின் தோல் மெல்லியதாகவும், அதிக ஊடுருவக்கூடியதாகவும், எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருக்கும். இதனால் அந்தப் பொருட்கள் குழந்தைகளின் தோலை எளிதில் பாதிக்கும். அதனால் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். 

குழந்தைகளை அதிக நேரம் சூரிய ஒளியில் படுமாறு வைத்திருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்கூட்டியே வயதாவது, தோல் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். மேகமூட்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையான, மணம் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

அடிக்கடி குளிக்கவைத்தல்

சுத்தம் முக்கியம் என்றாலும், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது அல்லது வெந்நீரை பயன்படுத்துவது குழந்தையின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசையை எடுத்துவிடும். இது வறட்சி, எரிச்சல், தோலழற்சி போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து வாரத்திற்கு சிலமுறை மட்டுமே வெந்நீரை பயன்படுத்தவேண்டும். வியர்வை மற்றும் அழுக்கு அதிகமானால் குழந்தைகளை தினமும் குளிக்கவைக்கலாம். ஆனால் வெந்நீர் அதிகம் பயன்படுத்தவேண்டாம்.

மாய்ச்சுரைஸர்களை தவிர்த்தல்

குழந்தைகளின் சருமம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஈரப்பதம் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் குளிர் மற்றும் வெயில் காலங்களில் அவர்களது சருமம் ஈரப்பதத்தை விரைவாக இழந்துவிடும். மாய்ச்சுரைஸர்களை தவிர்ப்பது சருமத்தை இன்னும் பலவீனப்படுத்தும். இதனால் வறட்சி, அரிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள மென்மையான, ஒவ்வாமை ஏற்படுத்தாத மாய்ச்சுரைஸர்களை பயன்படுத்துவது நல்லது. குளித்த உடன், சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே இதைப் பயன்படுத்துவது, ஈரப்பதத்தை எளிதில் சருமத்தில் தக்கவைக்கும். 


வெந்நீரில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டக்கூடாது 

தோல் நோய்களை புறக்கணித்தல்

பெற்றோர்கள் சிலசமயம் குழந்தைகளின் தோலில் வரும் தடிப்புகள், திட்டுகளை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அவை தானாகவே சரியாகிவிடும் என நம்புகிறார்கள். கீழேவிழுவது, விளையாடும்போது ஏற்படும் தடிப்புகள், காயங்கள் நாளடைவில் தானாக குணமடைந்துவிடும் என்றாலும், மற்ற தோல் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்தவேண்டும்.

வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தல்

வாசனை திரவியங்கள் மற்றும் அதிகம் வாசம் தரும் குளியல் சோப்புகள் பயன்படுத்துவதற்கும், நுகர்வதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு தோல்நோய்களை ஏற்படுத்தும். ஹைபோஅலர்கெனி பொருட்களையே பெற்றோர்கள் தேடவேண்டும். எளிமையான, வாசனையற்ற பொருட்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு நோய் அபாயங்களை குறைக்கின்றன.

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து தராதீர்கள்

குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது அரிப்பு, காயம் அல்லது ஏதேனும் உடல் பிரச்சனைகள் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே கடைகளில் கிடைக்கும் (OTC) க்ரீம்கள், மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. சில க்ரீம்கள், குறிப்பாக ஸ்டீராய்டுகள் கொண்டவை தவறாக பயன்படுத்தப்பட்டால் சருமத்திற்கு தீங்குவிளைவிக்கும். குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பதற்கு பொறுமை, விழிப்புணர்வு உள்ளிட்டவை அவசியம்.

Tags:    

Similar News