null
குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க காரணம் என்ன?
- குழந்தையின் கனவில் நரி வந்து விளையாட்டு காட்டுமா?
- அனிச்சை போன்றது! வலிப்புத் தாக்கத்தால் கூட குழந்தை சிரிக்கக்கூடும்?
குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். இதனை பலரும் கவனித்திருப்போம். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? தூங்கும்போது குழந்தை சிரிப்பதற்கான காரணம் என்னவென பலரும் யோசித்திருப்போம். அதற்கு பலரும் நரி கனவில் வந்து விளையாட்டு காட்டும் எனக்கூறுவார்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
மூன்று தூக்க நிலைகள்...
பெரியவர்கள், கனவில் நேர்மறையான விஷயங்கள் நடந்தால் சிரிப்பார்களாம். ஆனால் குழந்தை விஷயத்தில் அது உண்மையா என தெரியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் வயது, தூக்கத்தின் நிலையை பொறுத்து அவர்கள் சிரிப்பதற்கான காரணங்கள் மாறுபடும் எனக் கூறப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தூக்க சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளனவாம். அமைதியான தூக்கம், நிச்சயமற்ற தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான தூக்கம். சுறுசுறுப்பான தூக்கம் என்பது பெரியவர்களில் காணப்படும் விரைவான கண் அசைவு (REM) தூக்க நிலையைப் போன்றது. விரைவான கண் அசைவு தூக்கநிலையில் தூங்குபவர் தெளிவாக கனவு காணும் போக்கைக் கொண்டுள்ளனர்.
ஆனால் சுறுசுறுப்பான தூக்கத்திற்கும், REM தூக்கத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சுறுசுறுப்பான தூக்கத்தின் போது குழந்தைகள் முடங்கிப் போவதில்லை. சுறுசுறுப்பான தூக்கத்தில் இருக்கும்போது, ஒரு குழந்தை நடுங்கலாம், உறிஞ்சும் அசைவுகளைச் செய்யலாம், கைகால்களை அசைக்கலாம், புன்னகைக்கலாம் அல்லது முகம் சுளிக்கலாம். தூக்கத்தின் போது குழந்தை சிரிப்பது அனிச்சை போன்றது என்று பழைய ஆராய்ச்சிகள் விவரித்துள்ளன. தூக்கத்தின்போது ஏற்படும் தன்னிச்சையான புன்னகைகள், புன்னகைக்கப் பயன்படுத்தப்படும் தசைகளை வளர்க்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க வலிப்புத் தாக்கமும் முக்கிய காரணமாக இருக்கலாம்
வலிப்புத் தாக்கம்...
பொதுவாக, ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கத்தால் (சிரிக்கும் வலிப்புத் தாக்கம்) ஒரு குழந்தை சிரிக்கக்கூடும். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கம் என்பது ஒரு வகை வலிப்புத் தாக்கமாகும். இது திடீரென சிரிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தூங்கும் தருவாயில் இருக்கும்போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்படலாம். தூக்கத்தின் போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்பட்டால், குழந்தை விழித்தெழுந்து, வலிப்பு முடிந்ததும் மீண்டும் தூங்கச் செல்லலாம். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கங்கள் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். மேலும் அவை முகம் சுருங்குதல், முணுமுணுத்தல் அல்லது உதடுகளை அசைத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம். பொதுவாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் முகபாவனைகள், ஒரு பெரியவரின் முகபாவனைகளைப் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எல்லா உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் வெளிக்காட்டமாட்டான். சில சூழல்களை புன்னகையுடன் கடப்பான். அதுபோல சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போதும் கூட சிரிப்பார்களாம். 1 வயதான குழந்தைகளிலும் கூட சிரிப்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. 2 மாதம்வரை குழந்தைகள் தங்கள் முழு புன்னகையை வெளிப்படுத்தமாட்டார்கள். குழந்தைகள் நேரடியாக ஒருவரைப் பார்க்காமலேயே புன்னகைப்பார்கள். இது சாதரணமானது. ஆனால் குழந்தையுடன் அதிகம் இருப்பவர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அல்லது அவர்களை கவனித்து கொள்பவர்களோ சோகமாகவோ அல்லது மனசோர்வுடனோ இருந்தால் குழந்தைகள் குறைவாகவே சிரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் முடிந்தவரை குழந்தை பராமரிப்பாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.