லைஃப்ஸ்டைல்

சோம்பலால் புற்றுநோய் உண்டாகும்

Published On 2017-06-27 02:56 GMT   |   Update On 2017-06-27 02:57 GMT
செல்வ வளமை, சொகுசான வாழ்க்கை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைப்பதை குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கர வியாதிகளுள் ஒன்று புற்றுநோய். புற்று நோயை முற்றிலும் குணமாக்க இன்னும் வழிபிறக்கவில்லை. இருப்பினும், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதில் ஒன்றுதான் உடல் அலுங்காத சோம்பல் வாழ்க்கை. புகையிலை, மது, புகை போன்ற பழக்கங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.

செல்வ வளமை, சொகுசான வாழ்க்கை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பகப் புற்று நோய், புராஸ்டேட், குடல் புற்றுநோய் போன்றவை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் சுமார் 1¼ கோடியாக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டு இரண்டு மடங்காகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பதப்படுத்திய அல்லது துரித உணவுகளால் ஏற்படும் உடல் பருமன், குறைவான உடற்பயிற்சி மற்றும் அதிகமான புகைப் பழக்கமே இதற்குக் காரணம்.



புகைப்பதை குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஹெபடைடிஸ் பி மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து நல்ல பலனைக் கொடுக்கும். முன் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சையைத் தொடங்குவது நல்லது.

தொற்று சம்பந்தப்பட்ட கழுத்து, இரைப்பை புற்றுநோய் பாதிப்பு குறைந்துள்ள போதிலும் புகைப் பழக்கம், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புற்றுநோய்கள் பொதுவாக, பணக்கார நாடுகளில்தான் அதிகம் காணப்படுவது வழக்கம்.

உலகம் முழுவதும் காணப்படும் புற்று நோய்களில் 40 சதவீதம், வசதியான வாழ்க்கை முறையை கொண்டுள்ள மேலைநாடுகளில்தான் காணப்படுகின்றன. உண்மையில் இந்த நாடுகளின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நன்றாக வளர்ந்த நாடுகளில் மார்பகப் புற்று நோய், நுரையீரல், பெருங்குடல், புராஸ்டேட் புற்று நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. வளர்ச்சி அடையாத நாடுகளில் கழுத்து, இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் அதிகம் காணப்படுகின்றன.
Tags:    

Similar News