வழிபாடு

முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-07-26 04:37 GMT   |   Update On 2023-07-26 04:37 GMT
  • அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நடைபெற்றது.
  • இன்று பொங்கல் வழிபாடு, திருஷ்டி பூஜை நடக்கிறது.

முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் இருந்து ஆலமூடு அம்மன் ஜோதி புறப்பட்டு ஆலங்கோட்டை வந்தது. அங்கு சிவசுடலைமாடசாமி கோவிலில் அன்னதானம் நடந்தது. பின்னர் பல ஊர்கள் வழியாக ஊர்வலமாக சென்று ஆலமூடு அம்மன் கோவிலை வந்தடைந்தது.

விழாவில் நேற்று முன்தினம் மாலையில் அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

விழாவில் நேற்று காலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று அருகே உள்ள குட்டிகுளத்து இசக்கியம்மன் கோவில் பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பக்தர்கள் சேவா சங்க தலைவர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.

இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், சதீஷ், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், அருணா ஸ்டாலின், ராஜேஷ், அருள்ராஜ், மாரியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் பக்தர்கள் பூங்கரகம், முளைப்பாரி, பால்குடங்கள் சுமந்தும், சில பக்தர்கள் அலகு குத்தியும் வந்தனர்.

ஊர்வலம் வடக்கூர், சந்திப்பு, எம்.ஜி.ஆர் நகர், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் வழியாக ஆலமுடு அம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை, அக்னிசட்டி எடுத்தல், அம்மன் தேரில் பவனி வருதல் நடந்தது.

இரவு பூப்படைப்பும், தொடர்ந்து பூக்குழி பூஜையும் நடைபெற்றது. இதில் காசி ஆத்ம சைதன்னியா பீடம் குருமகாசன்னிதானம் ஜெகத்குரு கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் 41 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர். அதிகாலையில் அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நடைபெற்றது.

விழாவில் இன்று (புதன்கிழமை) பொங்கல் வழிபாடு, மஞ்சள் நீராடுதல், அன்னதானம் மற்றும் திருஷ்டி பூஜை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ. அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News