ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலையில் சண்டீகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபவிழா நிறைவு

Published On 2020-12-03 09:02 GMT   |   Update On 2020-12-03 09:02 GMT
திருவண்ணாமலையில் இன்று இரவு சண்டீகேஸ்வரர் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் கார்த்திகை தீப திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடைபெறும்.

மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாகடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மாடவீதிகளில் தேரோட்டம், சாமி வீதி உலா நடைபெறவும் அனுமதிக்கப்படவில்லை .கார்த்திகை தீபத்திருநாள் அன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அன்று சிறப்பு பஸ்களும் இயக்கப்படவில்லை. கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை சந்திரசேகரர் அம்பாளுடன் உலா வரும் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி பத்தாம் திருநாளான கடந்த 29-ந் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி, அம்பாள், பராசக்தி அம்மன் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி கடந்த 3 நாட்கள் தெப்ப உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெற்றது.

இன்று இரவு சண்டீகேஸ்வரர் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் கார்த்திகை தீப திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News