வழிபாடு

ஆங்கிலேயருக்கு அருள்செய்த பிச்சாவரம் குட்டியாண்டவர்

Published On 2024-05-10 04:47 GMT   |   Update On 2024-05-10 04:47 GMT
  • ஒரு பிரமாண்டமான கடற்கரையை ஒட்டிய வனப்பகுதி.
  • கப்பல் இயற்கை சீற்றத்தில் சிக்கி தரை தட்டியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது, தெற்கு பிச்சாவரம். இது சுரபுன்னை மரங்களும், தில்லை மரங்களும், அடர்ந்து காணப்படும் ஒரு பிரமாண்டமான கடற்கரையை ஒட்டிய வனப்பகுதி. பிச்சாவரம் கடல் பகுதி வழியாக இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு வணிகம் செய்து வந்தனர், ஆங்கிலேயர்கள் ஒரு முறை பேஸ்பரங்கி என்ற ஆங்கிலேயர், வணிகம் செய்வதற்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கிச் சென்றார்.

பிச்சாவரம் கடற்கரையை கடக்கும் பொழுது கப்பல் இயற்கை சீற்றத்தில் சிக்கி தரை தட்டியது. 'இந்த வணிகம் நடைபெறவில்லை என்றால் தனக்கு வாழ்க்கையே கிடையாது'என்று வேதனைப்பட்ட அந்த ஆங்கிலேயர், இருள் சூழ்ந்த வேளையில் தில்லை நடராஜர் ஆலயம் இருக்கும் திசையான மேற்கு நோக்கி, 'யாராவது காப்பாற்றுங்கள். நான் சரக்கு கொண்டு வந்த கப்பல் தரை தட்டி விட்டது. இந்த கப்பலை மீட்க முடியவில்லை என்றால், நான் வாழ்க்கையை இழந்தவன் ஆகிவிடுவேன்' என்று கதறி அழுதார்.

அப்பொழுது இருளில் ஒரு ஒளி தெரிந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளி வந்த திசையை பார்த்தபோது, அது நடந்து செல்லும் வகையில் மணல் பரப்பாக இருந்தது. அந்த மணல் பரப்பில் இறங்கி நடந்தபோது, ஓரிடத்தில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்தச் சிறுவன், ஆங்கிலேயரிடம் "உங்கள் கப்பலை நீங்கள் மீட்டெடுத்து செல்லலாம். அதற்கு என் அருள் உண்டு. ஆனால் நீங்கள் வணிகம் செய்து விட்டு வரும் பொழுது, எனக்கு இங்கு ஒரு ஆலயம் கட்டி விட்டுச் செல்லுங்கள்" என்றான்.

உடனே அந்த ஆங்கிலேயர், "நிச்சயமாக என் கப்பல் மீண்டு, நான் நல்லபடியாக வணிகத்தை முடித்தவுடன், இங்கே ஒரு ஆலயத்தைக் கட்டி விட்டுத்தான் என்னுடைய சொந்த நாடு திரும்புவேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தார். மறுநிமிடமே அந்தச் சிறுவன் மறைய, ஆங்கிலேயேருக்கு வந்த சிறுவன் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது.

அவர் மீண்டும் கப்பலுக்கு திரும்பியபோது, தரை தட்டிய கப்பல் சற்றே நகர்ந்து தண்ணீர் இருக்கும் பகுதிக்குச் சென்றிருந்தது. இதைக் கண்டு ஆங்கிலேயர் ஆச்சரியம் அடைந்தார். அவர் மகிழ்ச்சியில் வணிகம் செய்யும் நாட்டுக்கு கப்பலை செலுத்தினார். அங்கே எதிர்பார்த்ததை விட, வணிகம் மிகவும் நல்லபடியாக நடந்தது. கூடுதல் லாபத்தையும் பெற்றுத்தந்தது. வணிகம் செய்து கிடைத்த லாபத் தொகையில், அங்கேயே கோவில் கட்டுவதற்கு தேவையான, கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு கப்பலில் திரும்பினார்.

தெற்கு பிச்சாவரம் வந்த அவர், அந்த ஊர் மக்களிடம் தனக்கு நடந்து பற்றி கூறினார். அதைக் கேட்டதும் அந்த ஊர் மக்கள் ஆச்சரியம் அடைந்து, 'ஆகாச சாஸ்தா எனப்படும் அய்யனார்தான் உங்களுக்கு உதவி செய்து இருக்கிறார். அவரின் விருப்பப்படியே நீங்கள் ஆலயம் கட்ட முடிவு செய்தால், அதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்' என்றனர்.

உடனடியாக அந்த பகுதியில் ஆங்கிலேயர் கோவில் கட்டத் தொடங்கினார். அப்பொழுது அவரது கனவில் வந்த அய்யனார், "நான் இங்கு இந்த ஊரை காவல் காத்து வருகிறேன். எனக்கு காவலாய் என்னோடு இருக்கும் செம்பருப்புக்கும், என் ஆலயத்திற்கு முன்னால் ஒரு சன்னிதி அமைத்து விடுங்கள். எங்கள் இருவருக்குமே உருவம் வேண்டாம். நாங்கள் அரூபமாகவே அருள்பாலிப்போம்' என்று கூறினாராம்.

அவர் கூறியது போலவே ஆலயத்தைக் கட்டி முடித்தார், ஆங்கிலேயர். சிறுவனாக வந்து உதவியதால், அய்யனாரை 'குட்டியாண்டவர்' என்று பக்தர்கள் அழைக்கத் தொடங்கினர். அதுவே அய்யனாரின் திருநாமமாக இன்றும் உள்ளது. கோவில் கட்டி முடித்து விட்டு அந்த ஆங்கிலேயர் இத்தல சாஸ்தாவை வணங்கியபோது, ஒரு அசரீரி ஒலித்தது. அந்தக் குரல், 'கோவில் கட்டியது போக, எத்தனை கருங்கற்கள் மீதி இருந்தாலும் அதை உன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடு. இங்கே வைக்காதே' என்று கூறியதாம். 'எதற்காக அப்படிச் சொல்கிறார், சாஸ்தா' என்பது புரியாமல், மீதமிருந்த கருங்கற்களை ஏற்றிக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார், ஆங்கிலேயர். அவது சொந்த ஊருக்கு திரும்பியபோது, அந்த கருங்கற்கள் அனைத்தும் தங்கமாக மாறியிருந்ததாம்.

குட்டியாண்டவர் கோவில் கருவறையில், கருங்கல் சுவரில் மூன்று அணிகள் மட்டுமே இருக்கும். அவைகளுக்கு தான் எல்லா விதமான பூஜைகளும் செய்யப்படுகிறது. கோவிலின் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் முதலில் காணப்படுவது அணிவகுத்து நிற்கும் யானைகள், குதிரைகள். அதன் எதிரே அய்யனாரின் காவலரான செம்பருப்பு சன்னிதி உள்ளது. இவருக்கு உருவம் கிடையாது. கருவறையில் வேல்கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. அதை வணங்கி விட்டு நேராக சென்றால், மகாமண்டபத்தில் பலிபீடம், மூன்று யானைகள் காணப்படுகின்றன. அதைக் கடந்து அர்த்த மண்டபம் சென்றால் துவார பாலகர்கள் கம்பீரமாக நிற்க உள்ளே, குட்டியாண்டவர் அரூபமாக தரிசனம் தருகிறார்.

இங்கு கருவறையில் குட்டியாண்டவர் அரூபமாக இருப்பதால் பூரண - புஷ்கலா இருவரும், குட்டியாண்டவர் சன்னிதிக்கு வலது பக்கம் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள். அய்யனார் எல்லாத் தலங்களிலும் பூரண புஷ்கலாவோடுதான் காட்சி தருவார். ஆனால் இவ்வாலயத்தில் அவர்கள் தனித் தனியாக காட்சி தருவது சிறப்பம்சமாகும். இக்கோவிலை சுற்றிலும் வலது பக்கம் விநாயகர், காசியம்மன், கருப்புசாமி, ராகு- கேது, விநாயகர், பாவாடைராயன் முனீஸ் வரன், சங்கிலிவீரன், அக்னிவீரன் சன்னிதிகளும் உள்ளது.

கடற்கரையை ஒட்டிய கோவில் என்பதால், இங்கு மீனவர்கள் குல தெய்வமாக வழிபாடு செய்கிறார்கள். தாங்கள் தொழிலுக்கு செல்லும் முன் இங்கு வந்து வணங்கி விட்டுச் செல்வதால் தங்கள் தொழில் சிறப்பாக நடப்பதாகவும், அதனால் அதிக அளவில் லாபம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். இக்கோவிலைச் சுற்றிலும் எல்லாவிதமான காவல் தெய்வங்களும் இருப்பதால், இங்கு குலதெய்வ வழிபாடுகள் தினந்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. கோவிலை ஐந்து முறை சுற்றி வந்து வணங்கினால் திரு மணத்தடை, பிள்ளைப்பேறு, கடன்களால் அவதி என அனைத்து பிரச்சினைகளும் தீரும். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் செல்லும் பேருந்தில் சென்றால், தெற்கு பிச்சாவரத்தில் இறங்க வேண்டும். அங்கே கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது, இந்த ஆலயம்.

Tags:    

Similar News