ஆன்மிகம்
ஆடித்திருவிழா கொடியேற்றப்பட்டதையும், ஸ்ரீதேவி, பூமி தேவியுடன் சுந்தரராஜபெருமாள் காட்சி அளித்ததையும் காணலாம்.

அழகர்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2020-07-27 09:44 GMT   |   Update On 2020-07-27 09:44 GMT
அழகர்கோவில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.
பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவதும். அதன்படி இந்த வருடம் நேற்று காலையில் மேள தாளம் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

அலங்கரிக்கப்பட்ட தங்கக்கொடி மரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.

இதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் தங்கப் பல்லக்கு உற்சவமும், இரவில் சிம்ம வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) வழக்கம் போல் காலை நிகழ்ச்சியும், இரவு அனுமன் வாகனத்தில் புறப்பாடும், 29-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 30-ந் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 31-ந் தேதி இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும்.

ஆகஸ்டு 1-ந் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 2-ந் தேதி ஆடி 18-ம் பெருக்கு விழாவும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும், 3-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழாவும் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவில் வளாகத்தின் உள்ளேயே தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறும். 4-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஆடி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் மேற்கண்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News