ஆன்மிகம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி

திருவானைக்காவலில் குபேரலிங்கத்திற்கு நாளை அன்னாபிஷேகம்

Published On 2019-11-11 06:56 GMT   |   Update On 2019-11-11 06:56 GMT
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உள்ள குபேரலிங்கத்திற்கு நாளை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அன்னாபிஷேகத்தின்போது லிங்கத்தின் மீது சாற்றப்படும் சாதம் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது என்றும், இதனை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நாளை(செவ்வாய்க்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி 10 படி அரிசியால் சாதம் சமைத்து, கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் உள்ள குபேரலிங்கத்திற்கு நாளை மாலை 6 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

இதேபோல் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இன்று(திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 6 மணியளவில் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்திற்கு அன்னம் சாற்றி அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் இரவில் சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாகவும், காவிரி ஆற்றில் மீன்களுக்கு உணவாகவும் அளிக்கப்படுகிறது.

மலைக்கோட்டை நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. மேலும் உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் உள்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News