ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் ரத யாத்திரையை பக்தர்கள் வழிபடுவதை படத்தில் காணலாம்.

சேலத்திற்கு சபரிமலை ஐயப்பன் ரத யாத்திரை வருகை

Published On 2019-10-12 03:51 GMT   |   Update On 2019-10-12 03:51 GMT
சேலத்திற்கு சபரிமலை ஐயப்பன் ரத யாத்திரை நேற்று வந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் ஐயப்பன் தர்ம பிரசார ரத யாத்திரை ஒரு மாதம் வலம் வந்து 120 இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜையுடன் ஐயப்பன் ரத யாத்திரை புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சேலம் சாமிநாதபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ரத யாத்திரை சென்றது. அங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, சிவதாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மாலையில் ரத யாத்திரை சென்றது. இந்த ரத யாத்திரையில் சபரிமலை ஐயப்பன் சன்னதியின் கருவறையில் உள்ள விளக்கில் இருந்து ஏற்றப்பட்ட ஐயப்ப ஜோதி அணையா விளக்காக இருப்பதால், அதனை ஏராளமான பெண்கள் பார்த்து வழிபட்டனர்.

2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் இருந்து தொடங்கும் ஐயப்பன் ரத யாத்திரை, குகை மாரியம்மன் கோவில் திடல், கிச்சிப்பாளையம் பாலவிநாயகர் கோவில், அம்மாபேட்டை காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை பகுதிகளுக்கும் செல்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பட்டைக்கோவிலில் ரத யாத்திரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு சின்னதிருப்பதி பெருமாள் கோவில், மாலை 4 மணிக்கு கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில், 5.30 மணிக்கு தெய்வீகம் திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானம், இரவு 7.30 மணிக்கு சூரமங்கலம் முல்லைநகர் சாய்பாபா கோவில் அருகிலும் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 9-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் இந்த ரத யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News