ஆன்மிகம்
கள்ளழகருக்கு வர்ணகுடை சாத்தும் வைபவம்

கள்ளழகருக்கு வர்ணகுடை சாத்தும் வைபவம்

Published On 2019-10-08 06:18 GMT   |   Update On 2019-10-08 06:18 GMT
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வர்ணகுடை சாத்தும் வைபவம் நடைபெற்றது.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சாமிக்கு வர்ணகுடை சாத்தும் விழா நடைபெறும். அதன்படி நேற்று கள்ளழகருக்கு வர்ணகுடை சாத்தும் வைபவம் நடைபெற்றது. முன்னதாக மதுரை கீழமாரட் வீதி நவநீதகண்ணன் பஜனை கூடம் சார்பில் அழகுமலையான் வர்ணகுடை மேளதாளம் முழங்க பாதயாத்திரையாக எடுத்து வரப்பட்டது.

மதுரையில் இருந்து அழகர்கோவில் வரை வழிநெடுகிலும் உள்ள மண்டபங்களில் பக்தர்கள் குவிந்து வர்ண குடையை வரவேற்றனர். மேலும் பஜனை குழுவினர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்திகோஷத்துடன் பாடிவந்தனர். அழகர்கோவிலை வந்தடைந்த அவர்கள் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் சன்னதி முன்பாக கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாளுக்கு வர்ண அலங்கார குடை சாத்தப்பட்டது.

பின்னர் பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க சாமிக்கு நூபுரகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இந்த விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள், விழா கமிட்டியினர், பஜனை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News