ஆன்மிகம்
மூன்று தேவியின் சிறப்புகள்

நவராத்திரி: மூன்று தேவியின் சிறப்புகள்

Published On 2019-10-03 09:04 GMT   |   Update On 2019-10-03 09:04 GMT
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிலர் நவ கன்னிகையாகவும், இன்னும் சிலர் நவ துர்க்கையாகவும் வழிபாடு செய்கிறார்கள்.
துர்க்கை: இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை கொண்டவள். வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தியாவாள். வீரர்கள் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபடும் தெய்வம்.

லட்சுமி: இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தியானவள். லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.

சரஸ்வதி: இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். வெண் தாமரையில் வீற்றிருப்பவள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி. அழியாத செல்வமான கல்வியை அனைவருக்கும் வழங்கும் சக்தியாக இவள் திகழ்கிறாள். இவளுக்கு கூத்தனூரில் தனியாகக் கோவில் அமைந்துள்ளது.

முப்பெரும் தேவியரின் அம்சம்

நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, ஆகரி துர்க்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

அஷ்ட லட்சுமி: ஆதி லட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி. இவை லட்சுமியின் அம்சங்கள்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.

நவ கன்னிகை

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிலர் நவ கன்னிகையாகவும், இன்னும் சிலர் நவ துர்க்கையாகவும் வழிபாடு செய்கிறார்கள். 10 வயது நிரம்பாத கன்னிகையாக நாளும் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவ கன்னிகை வழிபாடு ஆகும்.

முதல் நாள் (2 வயதுக் குழந்தை) - குமாரி

இரண்டாம் நாள் (3 வயதுக் குழந்தை) - திரிமூர்த்தி

மூன்றாம் நாள் (4 வயதுக் குழந்தை) - கல்யாணி

நான்காம் நாள் (5 வயதுக் குழந்தை) - ரோகிணி

ஐந்தாம் நாள் (6 வயதுக் குழந்தை) - காளிகா

ஆறாம் நாள் (7 வயதுக் குழந்தை) - சண்டிகா

ஏழாம் நாள் (8 வயதுக் குழந்தை) - சாம்பவி

எட்டாம் நாள் (9 வயதுக் குழந்தை) - துர்க்கா

ஒன்பதாம் நாள் (10 வயதுக் குழந்தை) - சுபத்ரா

நவதானிய நைவேத்தியம்

நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். ஒன்பது விதமான துர்க்கைகளையும் வழிபடுவதன் பலனாக பலவித சிறப்புகள் நமக்கு வந்து சேரும். நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நவதானியத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். கோதுமை, பச்சரிசி, துவரை, பச்சைப்பயறு, கடலை, மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு ஆகியவை அந்த நவதானியங்கள் ஆகும்.
Tags:    

Similar News