ஆன்மிகம்
பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா

Published On 2019-03-23 05:30 GMT   |   Update On 2019-03-23 05:30 GMT
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி பதி உள்ளது. இந்த பதியில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு திருப்பாற்கடலில் தீர்த்தமிடுதல் நடந்தது. தொடர்ந்து 5.30 மணிக்கு தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் திருவிழா கொடியை ஏற்றினார்.

நிகழ்ச்சியில் தர்ம கர்த்தாக்கள் செல்வராஜன், மனோகர செல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து பால் அன்னதர்மம், காலை 11.30 மணிக்கு முட்டப்பதி தீர்த்தம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அன்னதர்மம், இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல் ஆகியவை நடந்தது. விழா நாட்களில் தினமும் அதிகாலை பணிவிடை, உகப்படிப்பு, பால் அன்னதர்மம், இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வருதல், அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

29-ந் தேதி இரவு 7 மணிக்கு கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம், விவேகானந்தபுரம், சுவாமி நாதபுரம், வழியாக வலம் வந்து நள்ளிரவு 12 மணிக்கு முட்டப்பதியின் வடக்கே கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

அடுத்த மாதம் 1-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.
Tags:    

Similar News