ஆன்மிகம்
சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றிய பின்னர் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

Published On 2019-03-22 06:26 GMT   |   Update On 2019-03-22 06:26 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் எழுந்தருளினார்.

மாலையில் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலுக்கு சென்றார்.

தொடர்ந்து சுவாமியும், வள்ளி அம்பாளும் கீழரத வீதி பந்தல் மண்டப முகப்பில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து, கோவிலை சேர்ந்தனர். இரவில் கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர் கள் பாத யாத்திரையாகவும், பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

விழாவையொட்டி பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News