ஆன்மிகம்
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2018-11-03 03:02 GMT   |   Update On 2018-11-03 03:02 GMT
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. மாலையில் சமய சொற்பொழிவு நடந்தது.

திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு உலகம்மன் தேருக்கு எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் மேள தாளம் முழங்க வலம் வந்து 9.50 மணிக்கு நிலையத்தை அடைந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

விழாவில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.20 மணிக்கு யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.05 மணிக்கு தெற்கு மாசிவீதியில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News