ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

Published On 2018-09-25 03:16 GMT   |   Update On 2018-09-25 03:16 GMT
இந்த மாதத்திற்கான கிரிவலம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு முடிகிறது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை பக்தர்கள் சிவனாக வழிபடுகின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வர்.

அதன்படி இந்த மாதத்திற்கான கிரிவலம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு முடிகிறது. இந்தநிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் சிலர் தங்கள் குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர்.

மாலை சுமார் 5 மணிக்கு மேல் இரவு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தனர். கிரிவலத்தை முன்னிட்டு நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சில இடங்களில் பேரி கார்டுகள் வைத்து போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர்.
Tags:    

Similar News