ஆன்மிகம்
சிவகங்கை தீர்த்தகுளத்தில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தபோது எடுத்தபடம்.

அருணாசலேஸ்வரர் கோவில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி

Published On 2018-08-14 06:02 GMT   |   Update On 2018-08-14 06:02 GMT
அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலை கோவில் முக்கிய இடத்தில் உள்ளதால் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் நடந்த இந்த கொடிஏற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் விநாயகர், பராசக்தி அம்மன் மாடவீதி யில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த நிலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நிறைவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. அங்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது.

இரவு பராசக்தி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 12.30 மணிஅளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழாவுக்கான ஏற்பாடுகள் காலை முதல் நடந்தது. அதில் குண்டத்தில் இறங்குவதற்காக பக்தர்கள் அங்கு வந்த வண்ணம் இருந்தனர். 
Tags:    

Similar News