ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

Published On 2018-05-10 06:05 GMT   |   Update On 2018-05-10 06:05 GMT
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

இதுதவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.



நடை திறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

19-ந் தேதியன்று அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.முன்னதாக 17-ந் தேதி சன்னிதானத்தில் ஜோதிட பண்டிதர்கள் தலைமையில், ஆறாட்டு ஊர்வலத்தின் போது யானை மிரண்டு பள்ளத்தில் விழுந்த சம்பவம் தொடர்பாக அருள் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News