ஆன்மிகம்
ஒடுக்கு பூஜையில் உணவு பதார்த்தங்களை துணியால் மூடி பூசாரிகள் பவனியாக சென்றதையும்,பக்தர்களையும் படத்தில் காணலாம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை

Published On 2018-03-14 06:06 GMT   |   Update On 2018-03-14 06:06 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நள்ளிரவில் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்புபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி வருதல், பஜனை, வில்லிசை, அன்னதானம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் குமரி மாவட்டம் மட்டும் அல்லாது கேரளாவில் இருந்தும் பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அம்மனை தரிசித்தனர்.

விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், அடியந்திரபூஜை, குத்தியோட்டம், சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடந்தன.

நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலை சுற்றியுள்ள தென்னந்தோப்புகளில் தங்கியிருந்தனர். மேலும் அங்கு பொங்கலிட்டும் அம்மனை வழிபட்டனர்.

மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. சாஸ்தா கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்களை கோவில் பூசாரிகள் 9 மண்பானைகள் மற்றும் ஓலைப்பெட்டிகளில் வைத்து பவனியாக கொண்டு வந்தனர். மேலும் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. மண்பானைகளை சுமந்து வந்த பூசாரிகள் தங்களது வாயில் துணியால் முடியிருந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளைத்துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டிருந்தது. இந்த பவனி கோவிலுக்கு வந்து முடிவடைந்தது. ஒடுக்கு பவனியின்போது எந்த சத்தமும் கேட்காதபடி மக்கள் அமைதியாக இருந்தனர்.

ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை சுற்றி வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் அவை அம்மனுக்கு படையலிடப்பட்டன. அதைத்தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனை நடந்தபோதே திருவிழா திருக்கொடியும் இறக்கப்பட்டது.

ஒடுக்கு பூஜையையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மண்டைக்காடுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்கள் இயங்கின.

திருவிழாவையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News