ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தொடங்கியது

Published On 2018-01-20 03:17 GMT   |   Update On 2018-01-20 03:17 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம், சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, தை, ஆவணி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு நடை திறந்து மலர் அலங்காரத்துடன் அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

காலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது, திரளான பக்தர்கள் பக்திகோஷமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து 7 மணிக்கு அய்யா வாகன பவனியும், மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி தெருவீதி வலம் வருதலும் நடந்தது.

விழாவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதர்மமும் நடைபெறுகிறது.

வருகிற 26-ந்தேதி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News